அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லப்பர் பந்து’. லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்க தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் தினேஷ் விஜயகாந்த் ரசிகராக நடித்திருப்பதால் முக்கியமான இடங்களில் விஜயகாந்த் - இளையராஜா கூட்டணியில் வெளியான ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்...’ பாடல் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் இப்படத்தை பார்த்து பாராட்டினர். மேலும் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், கார்த்தி, ராஜு முருகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
சமீபத்தில் படக்குழு தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று அங்கு இருக்கும் விஜயகாந்தின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் விஜயகாந்த் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை படக்குழு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளது.