
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து கைதி 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டில் ஆமிர் கானுடன் ஒரு படம் பண்ணவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் மீண்டும் இணைந்தால் அது மாஸ்டர் 2-வாக இருக்கவே ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், “எல்லோரும் விஜய்யுடன் லியோ 2 பண்ண வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால் நான் அவருடன் மாஸ்டர் 2 பண்ணவே ஆசைப்படுகிறேன். மாஸ்டர் படத்தில் ஒரு பகுதியின் கதை முழுமை பெறாமல் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால் அதை பண்ணவே எனக்கு ஆசை. அதோடு அவரை ஜே.டி. கதாபாத்திரமாக அந்த வைப்பில் பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “லியோ கதாபாத்திரம் எல்.சி.யு-வில் வலுவான கதாபாத்திரம் தான். எல்லோருக்கும் அது பிடிக்கும். ஆனால் மாஸ்டர் 2 படத்துக்கு என்னிடம் சரியான ஐடியா இருக்கிறது. அது விஜய்க்கும் தெரியும். இது எல்லாமே நேரம் தான் முடிவு பண்ணும்” என்றார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் முறையாக 2021ஆம் ஆண்டு வெளியான படம் மாஸ்டர். இதில் கல்லூரி பேராசிரியராக ஜே.டி. என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியான நிலையில் கிளைமாக்ஸில் பார்ட் 2 படத்துக்கான லீட் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க விஜய் தனது முழு நேர அரசியலுக்கு முன்பு கடைசி படம் ‘ஜனநாயகன்’ என அறிவிருத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.