இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான இப்படத்திற்கென்று தனி ரசிகர் கூட்டம்இன்றளவும் உண்டு. இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி 'கொரோனா குமார்' என்ற கதையை உருவாக்கியுள்ளார் கோகுல். இப்படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பில் சதீஷ் தயாரிக்கிறார். முதற்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்கும் மற்றும் பணிபுரியும் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் கதையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " 'கொரோனா குமார்' கதையை, இயக்குனர் கோகுல் சொல்லிக் கேட்டேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விரைவில் பெரிய திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.