“நடித்ததற்கு 3 காரணங்கள் இருக்கின்றன” – லோகேஷ் கனகராஜ்

lokesh kanagaraj shruthi hassan inimel album song press meet

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இனிமேல் ஆல்பம் நேற்று மாலை வெளியானது. இதையொட்டி பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர்.

ஸ்ருதிஹாசன் பேசுகையில், “இனிமேல் பாடலை முதலில் நான் ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு சுழற்சியாக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் ஏற்ற இரக்கங்கள் இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இதற்குள் வந்தார். அவரே ‘இனிமேல்’ பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். இவ்வாறு தான் “இனிமேல்’ உருவாகி இன்று இந்த மேடையில் இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று கேட்டால், விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் என்று நினைக்கிறேன்.ஒரு முறை இவரை கேமராவில் பார்க்கும் போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதிலிருந்து தான் இந்த எண்ணம் உதயமானது. இந்த பாடல் ஆல்பத்தின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது நான்கு நிமிடத்திற்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சி தான்.ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்நிறை குறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை இதன் மூலம் சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கை தான். எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் மிக நேர்மையாக கருத்து சொல்லுவார். அவருக்கு எங்கள் இணை பிடித்திருந்தது என்றே கூறினார்” என்றார்.

லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “நடித்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குக் கிடையாது. முதலில் இனிமேல் ஆல்பம் பாடல் தொடர்பாக நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் என்னை அணுகிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது, மேலும் நாம் ஏன் நடிக்க வேண்டும் என்கின்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. அந்த கேள்வியுடன் தான் அவர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது. அங்கு எனக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது, அந்தக் கதையை மிகவும் இயல்பாக அவர்கள் விவரித்த விதம் தான்.அப்பொழுது எனக்கு ஏன் நடிக்கக்கூடாது என்கின்ற எண்ணமும் எழுந்தது. நான் நடித்து என்னுடைய உருவம் திரையில் தோன்றப் போகும் ஓரிரு கணங்களில் திரையின் பின்னால் அவரின் குரல் ஒலிக்கப் போகிறது என்கின்ற எண்ணமே என்னை சிலிர்க்கச் செய்தது. மேலும் என் திரைப்பயணத்தில் அது ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும் என்றும் தோன்றியது. அதன் பிறகு தான் நடிக்க சம்மதித்தேன்.

உண்மையாகவே எனக்கு நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்திருந்தால் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம் பொல்லாதவன். அப்படத்தின் கதையைப் போல் ஒரு கதையினை ரெடி செய்து, என் அசோசியேட் இயக்குநரைக் கொண்டு அதை இயக்க வைத்து அதில் நானே நடித்திருப்பேன். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை. ஆக நடிக்க சம்மதித்ததற்கு 3 காரணங்கள் தான். மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்தது, முதற் காரணம். கமல்ஹாசன் சார் இரண்டாம் காரணம், ஸ்ருதிஹாசன் மற்றும் அவரின் குழுவினர் 3ஆவது காரணம். லியோ படத்தின் டப்பிங் பணியின் போது நான் கமல் சாருக்கு போன் செய்து இப்படி ஒரு டயலாக் படத்தின் இறுதியில் நீங்கள் பேச வேண்டும் சார் என்று கேட்டுக் கொண்டேன்.எனக்காக ஒரு நாள் ஒதுக்கி, அந்த இறுதி டயலாக்கை ஐந்து மொழிகளிலும் வந்து பேசிக் கொடுத்துவிட்டு சென்றார். அவரே இந்த அளவிற்கு எனக்கு உதவும் போது, ராஜ்கமல் தரப்பு என்னுடைய தாய்வீடு போன்றது.அவர்களிடமிருந்து என்ன கேட்டு வந்தாலும்,என்னாலும் மறுக்க முடியாது என்பதே உண்மை. மேலும் அடுத்து மூன்று படம் இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். அந்தப் பணிகளை துவங்கவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும்.ஜூன் மாதத்தில் இருந்து என் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் துவங்கவிருக்கின்றன” என்று பேசினார்.

lokesh kanagaraj Raajkamal Films shruthi hassan
இதையும் படியுங்கள்
Subscribe