மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்றொரு படத்தை இயக்கினார். தமிழ் சினிமா என்றாலே பாடல் மற்றும் ஹீரோயின் இல்லாமல் இருக்காது. அப்படி சோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட படங்களில் நிலை தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்பதால் கதைக்கு பாடல் மற்றும் ஹீரோயின் தேவையில்லை என்றாலும் கட்டாயமாக சேர்த்துக்கொண்டு படம் எடுக்கும் நிலை இருக்கிறது.

இந்நிலையில் லோகேஷின் கைதி படத்தில் பாடலும் இல்லை ஹீரோயினும் இல்லை என்பதையே ஒரு மார்க்கெட்டிங் யுக்தியாக பயன்படுத்தினர் என்றார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி, அதுவும் தீபாவளி பண்டிகையில் பிகில் படத்துடன் மோதி மிகப்பெரிய வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டது.

கைதி படம் வெளியாகுவதற்கு முன்பே லோகேஷ் அடுத்து நடிகர் விஜய்யை வைத்து இயக்க ஒப்பந்தமானார். அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து தளபதி 64 படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் மூன்றாம் கட்ட ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.

இப்படி பல எதிர்பார்ப்புகளை தனது முதல் படத்திலிருந்தே தூண்டிவரும் லோகேஷின் கைதி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று மாலை அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்தார். சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்தபின் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.