இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது அடுத்த பட பணிகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் ரஜினியை வைத்து அவர் இயக்கிய கூலி படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று, ரூ.500 கோடியை நெருங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கைதி 2 படம் மற்றும் ஆமீர் கானை வைத்து ஒரு படம் என அவர் கமிட்டாகியுள்ளார். ஆனால் லேட்டஸ்டாக வெளியான தகவலின் படி ரஜினி - கமல் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனால் எந்த படம் அவரது அடுத்த படமாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கூலி பட வெளியீட்டிற்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் கூலி படம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, “என் படம் குறித்து எதுவுமே இதுவரை நான் சொன்னதில்லை. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான் என்னை இந்த இடத்தில் வைத்திருக்கிறது. என்னை மட்டுமில்லை எல்லா கலைஞர்களையும் அதுதான் ஒரு இடத்தில் வைத்திருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்பு இல்லை என்றால், நாங்கள் சினிமா பண்ண முடியாது. அதே சமயம் அந்த எதிர்பார்ப்பை குறை சொல்ல முடியாது. கூலி படத்தில் கூட, இந்த படம் டைம் டிராவல் ஜானர், எல்.சி.யு-வில் வருகிறது என நான் சொல்லவில்லை. ரசிகர்களே யூகித்தி அவர்களே சொல்லிக்கொண்டார்கள்.
படத்திற்கு நாங்கள் ட்ரெய்லர் கூட ரிலீஸ் செய்யவில்லை. 18 மாதம் படத்தை எந்தளவிற்கு மறைத்து வைக்க முடியுமோ அந்தளவிற்கு மறைத்து வைத்திருந்தேன். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மறைத்து வைக்க முடியாது. எல்லா நாளும் ரஜினி படம், லோகேஷ் படம் என படத்தை பற்றி பேசிக்கொண்டே இருந்தார்கள். அதை தடுக்கவே முடியாது. அதற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுத முடியாது. ஒரு வேளை நான் எழுதிய கதை அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் அது நல்லது. அப்படி பூர்த்தி செய்யவிட்டால், அதை பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன்.
வெற்றி என்பது கோடிக்கணக்கில் ஒரு படம் வசூல் செய்வது கிடையாது. ஒரு படம் எடுத்து மக்களிடம் காண்பித்துவிட்டாலே, ஒரு டைரக்டராக நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். பாக்ஸ் ஆஃபிஸ் விஷயம் தயாரிப்பாளருக்கானது. ஒரு இயக்குநராக, நான் கதை சொல்ல வந்தேன், அதை மக்களிடம் காட்டுகிறேன், அவ்வளவுதான். அதனால் யார் வேண்டுமானாலும் டைரக்டர் ஆகலாம். அதில் நாம் எவ்வளவு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்றார்.
பின்பு ஏ.ஐ. குறித்து பேசுகையில், “கூலி படத்தில் பிளாஷ்ஃபேக் போர்ஷனில் நடித்தது ரஜினி சார் தான். அவரை டீ-ஏஜ் பண்ணினோம். ஆனால் அவருக்கு வாய்ஸ் கொடுத்தது ஏ.ஐ. அந்த தொழில்நுட்பத்துடன் வேலை செய்வது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 15 வருஷம் முன்னாடி ஒரே ஒரு ஆள் தான் ஓடிடி பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அது கமல்ஹாசன். விஸ்வரூபம் ரிலீஸ் சமயத்தில், பேசினார். அப்போது ஓடிடி என்றால் என்னவென்றே நமக்கு தெரியாது. இன்றைக்கு ஓடிடி வியாபாரம் இல்லாமல் ஒரு படம் ரிலீஸாகாது. அதனால் ஓடிடி மாதிரி தான் ஏ.ஐ-யையும் நான் பார்க்கிறேன்” என்றார்.