
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தவர் லோகேஷ் கனகராஜ். 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான பணிகளில் லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் 'தளபதி 67' பட அப்டேட் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பது, "அறிவிப்பு வராமல் நான் எதுவும் சொல்ல முடியாது. அப்டேட் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் வரும். வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருவதால் அப்படத்தின் தகவல்கள் வெளிவராமல் அடுத்த பட அப்டேட்டை முன்கூட்டியே நான் சொல்ல முடியாது. புரொடக்ஷன் தரப்பிலிருந்து அறிவிப்பு வந்த பிறகு நான் அப்டேட் சொல்கிறேன்" என பேசியுள்ளார்.