
கதையின் நாயகனாக தொடர்ந்து பயணித்து வரும் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கூடுதலாக கதை எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
இப்படம் மே 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், முதலில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மூணு நாள் முன்னாடி தான் படத்தின் ட்ரைலர் பார்த்தேன். ஒரு கமர்ஷியல் வெற்றிக்கான சக்சஸ் மீட்டர் என்னவோ அது இருப்பதாக ட்ரைலரிலே தெரிந்தது. அதனால் ஏற்கனவே இந்த படம் ஒரு பிளாக் பஸ்டர் படமென்று நினைக்கிறேன். சமீபகாலமாக ஃபீல் குட் படத்துக்கு மக்கள் கொடுக்கிற வரவேற்பை வைத்து பார்க்கும் போது இந்த படமும் ஒரு வெற்றி படம்தான்.
சூரியின் வளர்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கு. அதே சமயம் அவருடைய வளர்ச்சி எல்லோருக்குமே ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதென எல்லோரும் சொல்கிறார்கள். எந்த ஒரு வெறுப்பும் இல்லாமல் ஒருவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷம் படும் போது அது தான் உண்மையான வளர்ச்சி என நினைக்கிறேன். சமீபமா ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து சின்ன படங்கள் பண்ணலாம் என முயற்சி எடுத்து வருகிறேன். அதில் 10 கதை வந்தால் 5 கதை சூரி அண்ணனுக்கு எழுதிட்டு வராங்க. அந்த வளர்ச்சியும் பயங்கர பெரிதாக இருக்கிறது. அதைபோல இன்னும் பெரிய வெற்றி அவருக்கு வர வேண்டும்” என்றார்.