இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கூலி’ படம் நாளை(14.08.2025) வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் டாப் நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களோடு சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்துள்ளனர். இதனால் படத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரம்மாண்ட ஓபனிங் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ரஜினி, திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகளை கடக்கும் நிலையில் அதனை கொண்டாட காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் வெளியாகவுள்ளதால் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான ‘சிக்கிடு வைப்’, ‘மோனிகா’ மற்றும் ‘பவர்ஹவுஸ்’ பாடல்கள் உள்ளிட்ட அனைத்துமே பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் முதல் நான்கு நாட்களுக்கு இந்தியளவில் அனைத்து திரையரங்குகளிலும் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்புல்லாகி விட்டது. முன்பதிவிலே ரூ.14 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாவதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதனிடையே லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக தொடர்ந்து படக்குழுவினர் தொடர்பாக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே உதவி இயக்குநர்கள் தொடங்கி, ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், கலை இயக்குநர் சதீஷ், இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் பிலோமின் ராஜ், கோ டைரக்டர் சந்துரு ஆகியோர் குறித்து பகிர்ந்த லோகேஷ் தற்போது ரஜினி குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள பதிவில், “கூலி படம் என் பயணத்தில் எப்போதும் ஒரு ஸ்பெஷலான படம். அதற்கு காரணம் ரஜினி சார் தான். அவருக்காகத் தான் இந்த படத்தை எல்லோரும் அன்பை கொட்டி உருவாக்கியுள்ளனர். இந்த வாய்ப்புக்கும் படப்பிடிப்பிலும் வெளியிலும் உங்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல்களுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அந்த தருணங்களை நான் எப்போதும் போற்றுவேன். ஒரு போதும் மறக்கவே மாட்டேன். எங்கள் அனைவரையும் தொடர்ந்து இன்ஸ்பைர் செய்து வரும் உங்களுக்கு என் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எங்களை ரசிக்க வைத்து, கற்றுக்கொள்ள வைத்து, உங்களுடனே வளர வைத்து 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்ததற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.