லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இருந்து முன்னதாக வெளியான டைட்டில் டீசர், அடுத்து வெளியான ‘சிக்குடு வைப்’ பாடலின் கிளிம்ப்ஸ், பின்பு படம் வெளியாகுவதற்கு 100 நாட்கள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்தும் ஒரு முன்னோட்ட காட்சி மற்றும் அதில் பின்னணியில் இடம் பெற்ற ‘பவர்ஹவுஸ்’ பாடல் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெளியான ‘சிக்குடு வைப்’ மியூசிக் வீடியோ, பூஜா ஹெக்டே நடனமாடிய ‘மோனிகா’ மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பவர்ஹவுஸ்’ பாடல் என அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து படத்தின் ஆடியோ லான்ச் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

ரிலீஸுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பட புரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ளது படக்குழு. அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் அஜித்துடன் படம் பண்ணுவது குறித்து தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசியதாவது, “அஜித்துடன் படம் பண்ணுவதற்கான பேச்சு வார்த்தை கடந்த 10 மாதங்களுக்கு முன்னாடி ஆரம்பித்தது. எனக்கும் அவருடன் படம் பண்ண வேண்டும் என ஆசை. அவருக்கென ஒரு ஆன் ஸ்க்ரீன் வசீகரம் இருக்கிறது. அவருடைய ஆக்‌ஷன் ஹீரோ முகத்தை என்னுடைய படங்களில் அதிகம் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான கதையும் பேச்சு வார்த்தையும் முன்பே பேசினோம். 

அஜித்துடைய ஆர்வம் இப்போதைக்கு கார் ரேசில் இருக்கிறது. நானும் என் படங்களில் பிஸியாக இருக்கிறேன். எல்லாமே கைகூடி வந்தால் கண்டிப்பாக இருவரும் படம் பண்ணுவோம். அவருடன் படம் பண்ணினால் தான் எனக்கும் எல்லா ஹீரோவோடு படம் பண்ணிய திருப்தி இருக்கும். என்னுடைய வேலையும் ஒரு முழுமை பெறும். அஜித்துக்கான கதை கையில் இருக்கிறது. நூறு சதவீதம் அவருடன் படம் பண்ணுவேன். அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும்” என்றார்.