“நிறைய பாடங்கள், நிறைய நினைவுகள்...” - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

lokesh kanagaraj about 1 year of leo

லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இரண்டாவதாக இயக்கிய படம் லியோ. லலித் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பை பெற்றது.

முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் 7 நாட்களில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் லியோ வெளியாகி ஒரு ஆண்டு ஆகிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து லியோ 2 உருவாக்க வேண்டும் என தங்களது ஆசைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் படத்துடனான அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள பதிவில், “நிறைய பாடங்கள், நிறைய நினைவுகள், நிறைய அழகான தருணங்கள். எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான படம் லியோ. இதை சாத்தியமாக்கியதற்கு லவ் யூ விஜய் அண்ணா. இந்த படத்திற்காக வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைத்த அனைவருக்கும் படத்தை பார்த்த பார்வையாளர்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor vijay lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe