பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சமீபத்தில் அவர் நடித்த ‘கே டி’ என்ற கன்னட பட தமிழ்ப்பதிப்பின் விளம்பரத்தில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த இந்த விழாவில், லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய அவர், “நான் லோகேஷ் கனகராஜ் மீது கோவத்தில் இருக்கிறேன். லியோ படத்தில் அவர் எனக்கு பெரிய கேரக்டர் தரவில்லை. என்னை வீணடித்துவிட்டார்” என கலகலப்பாக பேசினார். 

சஞ்சய் தத்தின் பேச்சு இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் சஞ்சய் தத் பேசியது குறித்து லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ‘சஞ்சய் தத் சார், அப்படி பேசிய பிறகு என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார். நான் ஜாலியாக சொன்ன விஷயங்களை எடிட் செய்து போடுகிறார்கள், அதை பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது என்றார். உடனே நான், அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை சார், என்றேன். 

நான் ஒன்றும் ஜீனியஸோ அல்லது உலகின் சிறந்த இயக்குநரோ கிடையாது. நானும் என் படங்களில் நிறைய தப்பு பண்ணியிருக்கிறேன். எல்லாமே கற்றுக்கொள்வதுதானே. வரும் காலத்தில் அவரை சிறந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பேன்” என்றார்.