மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’. இப்படத்தை துல்கர் சல்மானின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. டாமினிக் அருண் இயக்கியுள்ள இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழ், உள்ளிட்ட இன்னும் சில மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. குறுகிய நாட்களிலே ரூ.100 கோடி வரை வசூலித்தது. இதன் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு இந்திய படம் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. மேலும் இப்படம்தான் இந்தியாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரூ.200 கோடி கிளப்பில் படம் இணைந்தது. உலகம் முழுவதும் ரூ.202 கோடிக்கும் மேலாக வசூலித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்தாக தெரிவிக்கப்பட்டு பின்பு மலையாள படங்களிலே அதிக வசூல் செய்த படமாக இப்படம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 5 பாகங்கள் எடுக்க திட்டமிட்டு வருவதாக தயாரிப்பாளர் துல்கர் சல்மான் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அறிவிப்பு வீடியோவில், டொவினோ தாமஸும் துல்கர் சல்மானும் தங்களது கதாபாத்திரமாகப் பேசிக்கொள்கின்றனர். அப்போது டொவினோ தாமஸ் முதல் சாப்டர் ‘கல்லியன்காட்டு நீலி’ பற்றி இருந்தது. ஆனால் அடுத்த சாப்டர் என்னைப் பற்றியது எனக் கூறுகிறார். மேலும் தனக்கு 389 சகோதரர்கள் இருப்பதாகவும் அவர்களால் தனக்கு ஆபத்து வந்தால் எனக்கு உதவி செய்ய நீ வருவாயா எனவும் சார்லி கதாபாத்திரமாகிய துல்கர் சல்மானிடம் கேட்கிறார். அதற்கு கோபத்துடன் எழுந்து செல்லும் துல்கர் சல்மான், எந்த பதிலும் சொல்லாமல் செல்ல... அவர் திரும்பி வருவதாக டொவினோ தாமஸ் சொல்கிறார். பின்பு டொவினோ தாமஸுக்கு ஆபத்து வருவதாக காட்சிகள் காட்டப்படுகிறது. பின்பு அவன் மீண்டும் வருவான் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் இரண்டாம் பாகம் டொவினோ தாமஸ் மற்றும் அவரது சகோதரர்கள் பற்றிய கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. இந்த அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.