Skip to main content

தமிழ் சினிமாவும் கௌரவ டாக்டர் பட்டமும்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

simbu

 

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனத் தமிழ்த்திரையுலகில் பன்முகம் கொண்டவரான நடிகர் சிம்புவிற்கு சமீபத்தில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது வேல்ஸ் பல்கலைக்கழகம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடின உழைப்பினால் இன்று முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள சிம்புவின் திரைத்துறை பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த டாக்டர் பட்டமானது அவருக்கு வழங்கப்பட்டது. சிம்புவிற்கு முன்னதாக எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ்த்திரையுலகில் யார் யார் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்கள், எந்தப் பல்கலைக்கழகம் அவர்களுக்கு வழங்கியது என்பதைப் பார்ப்போம்.

 

எம்.ஜி.ஆர். - 

 

தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவருக்கு 1974ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அதேபோல 1987ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 

 

சிவாஜி கணேசன் -

 

1952ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய அளவில் மிகப்பெரும் நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன். இவருக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 1986ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

 

கமல்ஹாசன் -

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், இயக்குநர், பாடகர் எனப் பல தளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து உலக நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் கமல்ஹாசன். இவருக்கு கடந்த 2005ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

 

விவேக் -

 

அண்மையில் காலமான நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக்கிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

 

விஜய் -

 

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய்க்கு கடந்த 2007ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அந்தச் சமயத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகளை ஒருசேரப் பெற... தன்னுடைய பெயரை எழுதும்போது டாக்டர் பட்டத்தைக் குறிப்பிடவேண்டாம் என மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார். அதன் பிறகு, விஜய்யின் பெயர் எந்த இடத்திலும் டாக்டர் விஜய் எனக் குறிப்பிடப்படவில்லை.

 

விக்ரம் -

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரும் ரசிகர்களால் சியான் என அன்போடு அழைக்கப்படுபவருமான விக்ரமிற்கு கடந்த 2011ஆம் ஆண்டு இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
  

விஜயகாந்த் -

 

90களில் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜயகாந்த், பின் தேர்தல் அரசியலில்  ஈடுபட்டு தமிழக எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியில் அமைந்துள்ள இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சர்ச் மேனேஜ்மேண்ட் அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.  

   

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.