/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/83_41.jpg)
கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் - சமந்தா நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிப்பதற்காக பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாயை தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கடனாக பெற்றிருந்தார் இயக்குநர் லிங்குசாமி. கடன் தொகைக்காக லிங்குசாமி கொடுத்த 35 லட்ச ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் பி.வி.பி கேப்பிடல் நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி லிங்குசாமிக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை தீர்ப்பளித்திருந்தது. மேலும் பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் சிறை தண்டனை உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம்தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் லிங்குசாமி, நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)