விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நயன்தாராவும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதில் சீமான், பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படத்திற்கு முன்னதாக ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. அந்த தலைப்பு என்னுடையது என்று இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் எல்.ஐ.சி நிறுவனம், இந்த தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு (25.07.2024) அவருக்கு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது படக்குழு. அந்த போஸ்டரில் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற தலைப்புக்கு பதிலாக ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என படத்தின் தலைப்பை மாற்றி அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தள பக்கத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும், “எனக்கு மிகவும் பிடித்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யாவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்து” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 20ஆம் தேதி எஸ்.ஜே சூர்யா பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.