
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லிஜோ பெல்லிசரி. ஆமென்', 'அங்காமலே டைரீஸ்', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு' என இவர் இயக்கியத்தில் வெளியான படங்களுக்குத்தனி ரசிகர்கள் உண்டு. இவருடைய கடைசி படமான 'ஜல்லிக்கட்டு' சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பலரையும் கவர்ந்தது.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சினிமா பட ஷூட்டிங்கிற்கு அரசுகள் அனுமதி வழங்காமல் உள்ளது. இதனால் சுயாதீன இயக்குனர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "எனக்கு சினிமா என்பது பணம் சம்பாதிக்கும் இயந்திரமல்ல. எனது பார்வையை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். எனவே இன்றிலிருந்து நான் ஒரு சுயாதீன இயக்குனராக மாறுகிறேன். சினிமாவில் எனக்குக் கிடைக்கும் பணம் அத்தனையையும், மேலும் நல்ல சினிமாவுக்காக மட்டுமே பயன்படுத்துவேன். வேறெதற்காகவும் அல்ல. எதுசரி என்று எனக்குப் படுகிறதோ அங்கெல்லாம் எனது திரைப்படத்தைத் திரையிடுவேன். ஏனென்றால் நான் அதை உருவாக்கியவன்.
நாம் ஒரு நோய்த்தொற்று சூழலில் - போர்ச் சூழலில் இருக்கிறோம். வேலைவாய்ப்பு இல்லை, அங்கீகாரம் கிடைக்காத நெருக்கடி, ஏழ்மை, மத ரீதியிலான பதற்றம், வீட்டை அடைய 1,000 மைல்கள் நடந்தே செல்லும் மக்கள், மன அழுத்தத்தில் இறந்து போகும் கலைஞர்கள் என ஒரு சூழல்.
எனவே, மக்களுக்கு உந்துதலைத் தர, உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்த, கலையை உருவாக்க வேண்டிய நேரம். உயிர் வாழத் தேவையான சிறிய நம்பிக்கையை ஏதோ ஒரு வடிவில் அவர்களுக்குத் தர வேண்டும்.
எங்களை வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லாதீர்கள். எங்கள் படைப்புகளைத் தடுக்காதீர்கள். எங்கள் நேர்மையைச் சந்தேகப்படாதீர்கள். எங்கள் சுய மரியாதையைக் கேள்வி கேட்காதீர்கள். உங்களுக்கு மோசமான இழப்பு நேரிடும். ஏனென்றால் நாங்கள் கலைஞர்கள்!
- லிஜோ ஜோஸ் பெலிச்சேரி, சுயாதீன திரைப்பட இயக்குனர்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)