/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/168_11.jpg)
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் 'லைகர்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வி அடைந்துள்ளது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகை சார்மியிடமும் பூரி ஜெகன்நாத்திடமும் நஷ்ட ஈடு கேட்க, அவர்களைச் சந்திக்க மறுத்த சார்மி, தனக்கும் கடுமையான பண இழப்பு என்றும், நஷ்ட ஈடு தர வாய்ப்பில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.
பின்பு, "பணத்தை நிச்சயம் மரியாதை நிமித்தமாக திருப்பி தருகிறேன். ஆனால், அந்த மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் ஒரு பைசா கூட தரமாட்டேன்" என பூரி ஜெகன்நாத் தெரிவித்திருந்தார். இதனிடையே லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், லைகர் படத்தின் தயாரிப்புக்காக தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் சிலர் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்திற்காக ஹவாலாபணத்தை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை 12 மணிநேரம் விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் தேவரகொண்டா, "பெரும் புகழடைவதன் மூலம் இது போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இதை ஒரு அனுபவமாகவே பார்க்கிறேன். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்ததும் நேரில் சென்று ஆஜராகி என் கடமையைச் செய்தேன். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)