Skip to main content

விஜயகாந்த்தை ‘கறுப்பு எம்ஜிஆர்’ என்று அழைக்க காரணம் - லியாகத் அலிகான் பகிரும் நினைவுகள்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Liaquat Ali Khan Shared a memory about vijaykanth

என் அம்மாவை எல்லோரும் "சின்னப்பிள்ளை' என்று அழைப்பார்கள். என் அம்மாவிடமும் காமாட்சி பாட்டி, "சின்னப்புள்ள, நான் எம்.ஜி.ஆர பார்த்தேன். என்புள்ள எனக்கு நூறு ரூபா குடுத்துச்சுடி'' என்று காட்டிவிட்டு "செக்கச் செவேல்னு எப்படி மின்னுது  தெரியுமா அந்தப் புள்ள...'' என்று கூறினார். நான் பக்கத்தில் நின்றிருந்தேன். அப்பொழுது தமிழ்நாட்டில் காமாட்சி பாட்டியைப் போல பல தாய்மார்கள் எம்.ஜி.ஆரை தங்கள் பிள்ளையாகவே நினைத்தார்கள். 

"விஜயகாந்த் பெரிய நடிகரா வருவார்ல' என்று என் அம்மா கேட்டதும், ஒரே வார்த்தையில் அவர்களை சந்தோஷப்படுத்தவும், திருப்திபடுத்தவும், பட்டென்று சொன்னேன்... "எம்.ஜி.ஆர். மாதிரி வருவாரும்மா...''

என் அம்மா பதிலுக்கு அப்படிக் கேட்பார்கள் என்று நான் நினைக்கவேயில்லை. "எம்.ஜி.ஆர். நல்ல கலரா, சிவப்பா இருப்பாராம்ல. விஜயகாந்து ரொம்ப கருப்பாவுல்ல இருக்காரு'' என்றார். என் வாயிலிருந்து மின்னல் போல வார்த்தை வந்தது. "விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆரும்மா..''

எப்படி இதைச் சொன்னேன்... நான் சொன்னேனா, இறைவன் சொல்ல வைத்தானா? இது நடந்தது 1981-ஆம் ஆண்டு. "சட்டம் ஒரு இருட்டறை' வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்த நேரம். அன்று நான் யதார்த்தமாக அப்படிச் சொன்ன "கருப்பு எம்.ஜி.ஆர்.' என்ற பெயர், நீடித்து நிலைப்பதற்கும் நானே காரணமாக இருந்தேன் என்பது, என் வாழ்க்கையில் மறக்கவே முடியாதது. 

2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். வள்ளியூரில் விஜயகாந்த் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு அவர் தலைமையில் திருமணம். திருமணத்திற்கு அவருடன் நானும் போயிருந்தேன். மக்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் விஜயகாந்த் அவர்களுக்கு இருந்த புகழ், செல்வாக்கு இவற்றைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் விஜயகாந்த் அவர்களின் வள்ளியூர் வருகை உள்ளூர் கோவில் திருவிழா போல் இருந்தது. அவரைப் பார்ப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு வந்தார்கள். தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டார்.

ஒரு நடிகரைப் பார்ப்பதற்கு ரசிகர்களோ, மக்களோ ஆர்வப்படுவதும், முண்டியடித்துக் கொண்டு அருகில் வருவதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் இவரைப் பார்க்க இந்த மக்கள் ஆர்வப்படுவது எனக்கு வெறும் சினிமா மோகமாகத் தெரியவில்லை. வேறு எதையோ உணர்த்தியது. 

திருமணம் முடிந்ததும், வள்ளியூரில் ஒரு மைதானத்தில் ரசிகர்மன்றக் கூட்டம்.  பகல் நேரம்... வெயில் வாட்டிக்கொண்டிருந்தது. விஜயகாந்த் அவர்களும், நானும், மன்ற நிர்வாகிகளும் அந்த மைதானத்திற்குப் போனோம். கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் ஒரே ஆரவாரம். விசில் சத்தத்தில் வள்ளியூரே கிழிந்தது. 

ஒன்றிரண்டு பேர் பேசியதற்குப் பிறகு நான் பேசினேன். சில விஷயங்களைப் பேசிய பிறகு, நான் பேசியதுதான் ஹைலைட்டாக அமைந்தது. அதை அவசியம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு கதைபோலச் சொன்னேன்...

"மனிதர்களைப் படைக்கிற கடவுள் பிரம்மா, ஒரு நாள் தன் உதவியாளர்களை அழைத்தான். அவர்களிடம் சொன்னான்... "மதுரையிலே அழகார்சாமிங்கிற ஒரு நல்ல மனிதர் இருக்காரு. (விஜயகாந்த்தோட அப்பா பெயர் அழகர்சாமி) ஒரு அழகான ஆண் குழந்தையை உருவாக்கி, அவருக்கு அனுப்பி வைக்கணும். எல்லா நல்ல அம்சங்களும் இருக்கிற மாதிரி ஒரு குழந்தைய உருவாக்கி வைங்க'ன்னு சொன்னான். உதவியாளர்களும் உருவாக்கி வச்சாங்க. பிரம்மன் வந்து பார்த்தான்.

உதவியாளர்கள் சொன்னார்கள்... "எல்லா சிறப்பம்சமும் வேணும்னு சொன்னீங்க. அதே மாதிரியே குழந்தைய உருவாக்கியிருக்கோம். ஏழைகளுக்கு இரக்கப்படுற இதயத்தைக் கொடுத்திருக்கிறோம். அள்ளி, அள்ளிக் கொடுக்கும் கரங்களைக் கொடுத்திருக்கிறோம். தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க விரல்களைக் கொடுத்திருக்கிறோம். தமிழர்களுக்கு ஒரு இன்னலென்றால் துடிக்கின்ற மனதைக் கொடுத்திருக்கிறோம். அநீதிக்கு அஞ்சாத வீரத்தைக் கொடுத்திருக்கிறோம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்கின்ற துணிச்சலைக் கொடுத்திருக்கிறோம். தூய்மையான உள்ளத்தைக் கொடுத்திருக்கிறோம். எளிமையான பண்புகளைக் கொடுத்திருக்கிறோம். பார்ப்பவர்கள் மயங்கும்படியான சிவப்புக்  கலரைக் கொடுத்திருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

பிரம்மன் சொன்னான்... "எல்லா சிறப்பம்சங்களையும் வச்சுக்குங்க. சிவப்புக் கலரை மட்டும் கருப்பா மாத்தி, மதுரைக்கு அனுப்பி வைங்க''ன்னு சொன்னான். "என்ன பிரம்மா... எல்லா சிறப்பம்சமும் இருக்கணும்னு சொல்லிட்டு, ஏன் கலரை மட்டும் கருப்பாக்கி அனுப்பச் சொல்றே...?'' என்று உதவியாளர்கள் கேட்டார்கள்.

அதற்குப் பிரம்மன் சொன்னான்...

"தமிழ்நாட்டு மக்களைப் பத்தி, தாய்மார்களை பத்தி உங்களுக்குத் தெரியாது. அவங்க புள்ளைங்க ஸ்கூல்ல நல்ல மார்க் வாங்கிட்டு வந்தா, விளையாட்டுப் போட்டிகள்ல பரிசு வாங்கிட்டு வந்தா, எல்லாரும் பாராட்டற மாதிரி ஏதாவது ஒரு சாதனை பண்ணிட்டு வந்தா, பாக்கறதுக்கு அழகா லட்சணமா இருந்தா... மத்தவங்க கண்ணு பட்டுரும்னு கன்னத்துல கருப்பு பொட்டு வைக்கச் சொல்லுவாங்க. நான் உருவாக்கி மதுரைக்கு அனுப்பப்போற விஜயகாந்த்துங்கிற இந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகி சினிமா நடிகராகி செய்யப்போற சாதனைகளை நெனைச்சா, செய்யப்போற தர்மத்தை நெனைச்சா, இப்பவே என் கண்ணே பட்டுரும்போல இருக்கு. அதுக்கு கன்னத்துல கருப்புப் பொட்டு வச்சா மட்டும் பத்தாது. கலரையே கருப்பாக்கி மதுரைக்கு அனுப்புடான்னு சொன்னான்...'' என்று பேச... அந்த மைதானமே கைத்தட்டலாலும், உற்சாகத்தாலும் அதிர்ந்தது. அந்த கைத்தட்டலும் ஆரவாரமும் ஓய்வதற்கு சில நிமிடங்கள் ஆனது.

பேச்சைத் தொடர்ந்தேன்... "அதற்கப்புறம் பிரம்மன் உதவியாளர்களிடம் சொன்னான். தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற, தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க, ஏழை, எளியவர்களுக்காகப் பாடுபட, இல்லாதவர்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுக்க ஏற்கனவே நான் ஒரு சிவப்பு எம்.ஜி.ஆரை அனுப்பி வச்சேன். இப்ப நான் அனுப்பி வைக்கிறது கருப்பு எம்.ஜி.ஆர். என்றான்'' என்று முடித்தேன். ரசிகர்கள் துள்ளிக் குதித்தார்கள். 

அதற்குப் பிறகு விஜயகாந்த் ரசிகர்கள் அவரை "கருப்பு எம்.ஜி.ஆர்.' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். போஸ்டர்களில், சுவர்களில் "கருப்பு எம்.ஜி.ஆர்.' என்றே எழுதினார்கள்.

சார்ந்த செய்திகள்