/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/429_9.jpg)
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் லட்சுமன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் ‘சாவா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் மகாராஷ்டிரா பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது.
ட்ரைலரில் மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக் கருவியான 'லெஜிம்' கருவியை கொண்டு விக்கி கௌஷலும் ராஷ்மிகா மந்தனாவும் நடனமாடும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு அம்மாநில தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது, “சத்ரபதியின் வரலாற்றை உலகிற்கு விளக்க இதுபோன்ற முயற்சிகள் அவசியம். இருப்பினும், படத்தில் உள்ள சில ஆட்சேபனைக்குரிய காட்சிகள் குறித்து பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை முதலில் வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்டாமல் வெளியிடக்கூடாது. சத்ரபதி சம்பாஜி மகாராஜின் கௌரவத்தைப் புண்படுத்தும் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார்.
மேலும் சில அமைச்சர்கள் லெஜிம் நடனக்காட்சிக்கு குறித்து, அக்காட்சி சத்ரபதி சம்பாஜி மகாராஜின் ஆளுமையுடன் பொருந்தவில்லை என்றும் மரியாதைக்குரிய ஆளுமைகளை இப்படி சித்தரிப்பது உணர்வுகளைப் புண்படுத்தும் என்று கூறினர். இதையடுத்து படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என குரல்கள் எழுந்தது.
இதனை அடுத்து படத்தின் இயக்குநர் லட்சுமன் உடேகர் லெஜிம் நடனக் காட்சி படத்தில் இடம்பெறாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சத்ரபதி சம்பாஜி மகாராஜின் மரபை விட பெரியது எதுவுமில்லை. அது ஒரு சுருக்கமான நடனக் காட்சி மட்டுமே. ராஜ் தாக்கரேவை சந்தித்த பிறகு அவர் கூறிய ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வைத்து லெஜிம் நடனக் காட்சியை நீக்க முடிவு செய்தேன்” என்றார்.ராஜ் தாக்கரே மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)