டிக்கெட் கவுண்ட்டர் முற்றுகை - கொந்தளித்த ரசிகர்கள்

leo ticket reservation issue in sangam cinemas chennai

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் நாளை (19.10.2023) வெளியாகிறது.

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகத் தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தது. பின்பு படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், 19 ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சியை 4 மணிக்கே திரையிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்தது நீதிமன்றம். மேலும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் குழு 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டி உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுத்தனர். மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்த உள்துறைச் செயலாளர் அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே தமிழகம் முழுவதும் 9 மணிக்கே முதல் காட்சி தொடங்குகிறது.

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கி முதல் நாள் முழுவதும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சங்கம் திரையரங்கில் இன்று மதியம் முன்பதிவு தொடங்குவதாகத்தகவல் வெளியானதைத்தொடர்ந்து ரசிகர்கள் அத்திரையரங்கம் முன்பு கூடினர். ஆனால் முன்பதிவு டிக்கெட், ஆன்லைன் மூலமாக ஆரம்பமாகி சில நிமிடங்களிலே விற்று தீர்ந்துவிட்டதாகத்திரையரங்க நிர்வாக ஊழியர்கள் ரசிகர்களிடம் கூறியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிளாக் செய்து வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் அங்கிருந்த ரசிகர்கள் திரையரங்கு முன்பதிவு மையத்தை முற்றுகையிட்டனர். இந்தத்தகவலை அறிந்த காவல்துறையினர் சங்கம் திரையரங்கிற்கு வந்துரசிகர்களிடம், ஆன்லைனில் மட்டும் தான் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளதாகவும் கெளண்ட்டரில் கொடுக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் திரையரங்க நிர்வாகிகள் பிளாக் செய்துள்ளதாகக் கூறி ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு காவல்துறையினர் ஆன்லைன் புக்கிங் என்பதால் எதுவும் செய்ய முடியாது என விளக்கமாகச் சொல்லி அங்கிருந்த ரசிகர்களை அனுப்பி வைத்தனர்.

actor vijay Chennai lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe