லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல் மற்றும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ மற்றும் சமீபத்தில்தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக விஜய்யின் பேச்சு மற்றும் குட்டிக் கதைக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதையடுத்து இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாகத்திடீரென்று படக்குழு அறிவித்தது. மேலும் "விழாவுக்கான பாஸ்கள் அதிகம் கேட்டு கோரிக்கைகள் வருகின்றன. மேலும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி புது அப்டேட்டுகள் வெளியிடுவோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் படக்குழு குறிப்பிட்டது போல தற்போது புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. பாடலின் பெயர் 'படாஸ்' (Badass) எனக் குறிப்பிட்டு ஒரு போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. முதல் பாடலை எழுதிய விஷ்ணு எடவன் இந்த பாடலையும் எழுதியுள்ளார்.
இந்த போஸ்டரை லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து லியோ தாஸ் என்ற ஹேஷ் டேக்கையும் இணைத்துள்ளார். முன்னதாக சஞ்சய் தத் பெயர் ஆந்தனி தாஸ் என்றும் அர்ஜுனின் பெயர் ஹரால்டு தாஸ் எனவும் படக்குழு போஸ்டர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.