/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/86_36.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.
முதல் நாளான இன்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஆந்திராஉள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு காட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் படத்தை வரவேற்று வரும் நிலையில் புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கின் உள் நிச்சயம் செய்துகொண்ட சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 20 அடி நீள கேக், பிரியாணி விருந்து என கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க,பிரபலங்கள் லோகேஷ் கனகராஜ், அனிருத், மன்சூர் அலிகான், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, வைபவ் ஆகியோர் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.
இதனிடையே கிருஷ்ணகிரியில் லியோ படடிக்கெட் கிடைக்காததால் திரையரங்கின் பின்புறம் இருக்கும் சுவற்றில் ஏறி உள்ளே குதித்துள்ளார் ஒரு ரசிகர். அப்போது கால் முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த இளைஞரை காவல்துறையினர் மீட்டு அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த திரையரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us