லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் 7 நாளில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
இந்த வெற்றியைக் கொண்டாட நவம்பர் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டு, இது தொடர்பாக பெரியமேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் லலித் குமார், பாதுகாப்புக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தார். இந்த விழாவில் விஜய்யும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்திற்கு போலீஸ் தரப்பில், விழாவில் முக்கிய பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள், மொத்தம் எத்தனை நபர்கள் வருகிறார்கள் எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பி பதில் கடிதம் அனுப்பியது. பின்பு பரிசீலனை செய்து பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லியோ படத்தின் 12 நாள் வசூல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த படம் 500 கோடி வசூலித்ததாக சமூக வலைத்தளங்களில் பலர் கூறி வந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.