Skip to main content

"ஆடியோ லான்ச் இல்லைனா என்ன..." - வைரலாகும் விஜய் போஸ்டர்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

leo audio launch issue fans poster viral on social media

 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.  

 

படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல் மற்றும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ மற்றும் சமீபத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. 

 

இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக விஜய்யின் பேச்சு மற்றும் குட்டிக் கதைக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதையடுத்து இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாகத் திடீரென்று படக்குழு அறிவித்தது. மேலும் "விழாவுக்கான பாஸ்கள் அதிகம் கேட்டு கோரிக்கைகள் வருகின்றன. மேலும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி புது அப்டேட்டுகள் வெளியிடுவோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" எனக் குறிப்பிட்டது. . 

 

இதையடுத்து படக்குழு குறிப்பிட்டது போல தொடர்ந்து அப்டேட் வெளியிட்டு வருகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் 'படாஸ்' (Badass) இன்று வெளியாகும் என அறிவித்தது. இதனை முதல் பாடல் எழுதிய விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். பின்பு இன்று நள்ளிரவு 12 மணிக்கு அந்த பாடலின் கிளிம்ஸ் வெளியானது. அதில் இன்று மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.   

 

தொடர்ந்து அப்டேட்டுகள் வந்துகொண்டிருந்தாலும் இசை வெளியீட்டு விழா ரத்தானது தற்போது பேசுபொருளாகி உள்ளது. இது தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், "ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடிந்தது. விஜய் படத்திற்கு ஏன் கொடுக்க முடியவில்லை. நிகழ்ச்சியை ஏன் ரத்து பண்ண வைக்கிறீங்க. இந்த செயல் ரொம்ப அருவருக்கத்தக்கது. வன்மையாக கண்டிக்கிறேன். அவர் அரசியலுக்கு வரப்போவதாக தெரிகிறது. அதனால் அவருக்கு நெருக்கடி கொடுக்கிறீங்க" என செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியிருந்தார். 

 

இந்த நிலையில் இசை வெளியீட்டு ரத்தானது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செங்கல்பட்டில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "ஆடியோ லான்ச் இல்லைனா என்ன! ஆட்சிய புடிச்சிட்டா போச்சி என்ன நண்பா?" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சமீப காலமாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இரவு பாட சாலை திட்டம், இயக்கத்தில் உள்ள பல்வேவறு அணிகள் ஒருங்கிணைப்பு என தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருவதால் விரைவில் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ரசிகர்கள் தொடர்ந்து அரசியல் தொடர்பான போஸ்டர்களை அடித்து வருவது பலரது கவனத்தை பெற்று வருகிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்