Skip to main content

ஜெயலலிதா குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த பழம்பெரும் நடிகை எஸ்.என். பார்வதி

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Legendary actress SN Parvathy shares interesting facts about Jayalalitha!


'நக்கீரன் ஸ்டூடியோ' சார்பில் பழம்பெரும் நடிகை எஸ்.என். பார்வதியை சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது "ஹாய் என்று வந்ததே ஜெய்சங்கரால் தான். அதற்கு முன்பாக, எல்லோரும் வணக்கம் என்று தான் கூறுவர். அவர் எல்லோரையும் சமமாக தான் பார்ப்பார். நக்கல், கிண்டல் செய்து பேசுவார்.  அவர் இருந்தால் ஜாலியாக இருக்கும். ஜெயலலிதா நடனத்தை ஒருமுறை மட்டுமே தனது கண்களால் பார்ப்பார். பின்பு, அதே நடனத்தை ஆடுவார். நடன இயக்குநரிடம், மீண்டும் ஒருமுறை நடனமாடி காட்டுங்கள் என்று கேட்கக் கூட மாட்டார். மிகத் திறமையான பெண்மணி ஜெயலலிதா. 

 

ஜெயலலிதாவுக்கு அம்மாவாகவும், மாமியாராகவும், அத்தையாகவும், மருத்துவராகவும் திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவருடன் அதிக படங்களில் நடித்துள்ளேன். எனது மகளாக ஜெயலலிதா படத்தில் நடிக்கும் போது அவர் அமைதியாக இருப்பார். எப்போது பார்த்தாலும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார் ஜெயலலிதா. அந்த புத்தகம்தான் அவரின் வாழ்க்கையை, உயரத்திற்கு கொண்டு வந்ததோ, இல்லையோ என தெரியவில்லை. ஒவ்வொரு புத்தகமும் பெரியதாக இருக்கும். நான் பார்த்த வரைக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதா அரசியல் பேசியது இல்லை. ஜெயலலிதாவுக்கு புத்தகம்தான் உயிரே. அவருக்கு நான் அம்மாவாக நடித்தது எனக்கு பெருமை. 

 

ஜெயலலிதாவை எல்லோரும் அம்மு, அம்மு என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். ஜெயலலிதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே சமயத்தில், அவரது பெயர் எனக்கு அதைவிட அதிகமாகப் பிடிக்கும். ஜெயலலிதாவின் அம்மு என்கின்ற பெயர் உலகம் முழுவதும் பரவுகிறது. 

 

கமல்ஹாசன் என்னுடைய தம்பி; அவர் கூட இருந்தால், வராத நடிப்பு கூட வரும். ரஜினிகாந்த் கூட நடிக்க வந்ததே பெரிய விஷயம் தான். அதிசய பிறவி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தேன். சுமார் 7,000- க்கும் மேற்பட்ட நாடகங்கள், படங்களில் நடித்துள்ளேன். வடிவேல் தம்பியுடனான காமெடியில் தான் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது" எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்