ADVERTISEMENT

"என்னிடம் அத்துமீறிய பிரபல இயக்குனர்..." - கவிஞர், இயக்குனர், லீனா மணிமேகலை #metoo ட்வீட்

07:37 PM Oct 15, 2018 | vasanthbalakrishnan

உலக அளவில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிப்புகளுக்கு உள்ளான பெண்கள், 'நானும் இதுல பாதிக்கப்பட்டிருக்கேன்'னு வெளி உலகத்துக்கு சொல்றதுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மூவ்மென்ட் தான் 'மீ டூ' (me too). கடந்த அக்டோபர் 2017இல் சமூக வலைதளங்களில் துவங்கப்பட்ட இந்த 'மீ டூ', பல நாடுகளில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திட்டு வருது. பலருக்கு தண்டனையும் வாங்கித் தந்திருக்கு. இந்தியாவிலும் சில மாதங்களுக்கு முன்பு 'மீ டூ' ஹேஷ்டேக் பரவ ஆரம்பித்தது. பல பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட கதைகளை தைரியமாகப் பேச முன்வந்தார்கள்.

ADVERTISEMENT



'மீ டூ' மீண்டும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது பாடகி சின்மயி, தன் சமூக வலைதள பக்கங்களில் கவிஞர் வைரமுத்து பற்றியும் , வேறு சில ஆண்களை பற்றியும் குற்றச்சாட்டுக்களை வைத்ததற்குப் பிறகுதான். வைரமுத்து விஷயம் பல தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சின்மயியைத் தொடர்ந்து வேறு பல பெண்களும் 'மீ டூ' ஹேஷ்டேக் போட்டு, தங்களுக்கு நடந்த கொடுமைகளை பேச ஆரம்பிச்சுருக்காங்க. இதில் இப்ப இணைந்திருப்பது இயக்குனர், கவிஞர் லீனா மணிமேகலை.

போன வருடம் மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சமயத்திலேயே, லீனா மணிமேகலை, 2005இல் அவங்களுக்கு நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு ஒரு இயக்குனர் தன்னை பாலியல் ரீதியா கொடுமைப்படுத்தி இருந்ததா எழுதியிருந்தாங்க.

"2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்து கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்துதான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்று கொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது. "வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்" என்று சொன்ன இயக்குநரை நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்ட்ரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன்.

ADVERTISEMENT



சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன், அலறினேன். இருபது நிமிடத்தில் இறக்கி விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது. என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். பொறியியல் கல்லூரி காலத்தில் இருந்து எனக்கு அது வழக்கம். அன்று அதற்கு வேலை வந்தது. ஒரு குறுங்கத்தி அந்த இயக்குநரை என்னை என் வீட்டின் அருகில் இறக்கிவிட வைத்தது. என் மொபைலை திருப்பித் தர வைத்தது. இன்று இவ்வளவு ரைட்ஸ் பேசும் எனக்கு அன்று நடந்ததை நெருக்கமானவர்களிடம் சொல்வதற்குக் கூட தைரியமில்லை. ஊடக வேலை வேண்டாம் என்று கண்டித்துக் கொண்டிருந்த குடும்பம் இந்த நிகழ்வை காரணம் காட்டி வேலையில் இருந்து நின்றுவிட சொல்வார்கள் என்று அச்சம். "நோ" சொல்லிவிட்டதால் திரைத்துறை வட்டாரத்தில் செல்வாக்குள்ள அந்த இயக்குநர் என் பெயரைக் களங்கப்படுத்துவான் என்ற சிறுபிள்ளைத்தனமான பதட்டம் வேறு. எனக்குள்ளே புதைத்த பல கசப்புகளில் இந்நிகழ்வும் ஒன்று. பல வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்த்தால் இன்னும் நடுக்கமாகத் தான் இருக்கிறது ".

ஆனால் இந்த பதிவை எழுதுனப்ப யார் அந்த இயக்குனர்னு லீனா மணிமேகலை குறிப்பிடவில்லை. பல பேர், இப்போதாவது அந்த இயக்குனர் பேரை சொல்லலாமேன்னு கேட்டப்பவும் அவர் யாருன்றத லீனா மணிமேகலை சொல்லவில்லை. ஆனால் இப்போது அந்த இயக்குனர் யாரென்று சொல்லியிருக்கார்.

ஃபைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுசி கணேசன்தான் தன்னை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய இயக்குனர்னு லீனா மணிமேகலை தன்னோட ஃபேஸ்புக் போஸ்ட் மூலமா இப்ப தெரிவிச்சுருக்காங்க.

‘எனக்கு நடந்த மற்ற அனுபவங்கள பத்தி எழுதுறதுக்கான தைரியத்த வளர்த்துட்டு இருக்கேன். இந்த பழைய பதிவுல இருந்து ஆரம்பிக்கிறேன். நான் தொலைக்காட்சி தொகுப்பாளரா இருந்தப்ப, என்னை கார்ல அடைச்சு பாலியல் ரீதியா கொடுமைப்படுத்துனது இயக்குனர் சுசி கணேசன். என்னோட இன்னும் நிறைய குரல்கள் சேர்ந்து உலகத்துக்கு இது கேக்கும்னு நம்புறேன்’ னு லீனா மணிமேகலை சொல்லியிருக்கிறார்.

பல திரைப்பட பிரபலங்கள் மேல் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் வேளையில், இயக்குனர் சுசி கணேசன் மேல் லீனா மணிமேகலை தெரிவித்திருக்கும் புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் இந்த பிரச்சினைய பத்தி பேசுன நடிகர் விஷால், திரைத்துறை பெண்களுக்கு நடக்கும் இதுபோன்ற பாலியல் சீண்டல்களை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும்னு சொல்லியிருந்தார். இந்த நிலையில்தான் சுசி கணேசன் மேல் பாலியல் சீண்டல் புகார் எழுந்திருக்கு.

விஷால் சொன்னது போல, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படுதா, பல பெண்கள் தொடர்ச்சியா தெரிவித்து வரும் பாலியல் புகார்களுக்கு சரியான ஒரு தண்டனை கிடைக்கிறதா, வெளிநாடுகளில் வெளிமாநிலங்களில் பெரிய பெரிய ஆட்களுக்கு தண்டனை வாங்கித் தந்த இந்த மீ டூ மூவ்மென்ட் தமிழ்நாட்டில் என்ன செய்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT