உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத்தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவே முடங்கியுள்ள நிலையில், தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி, அத்தியாவசியப் பொருட்களுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதையடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் கஷ்டப்படும் குடும்பங்களுக்காக உதவி வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ரூபாய் 3 கோடியை கரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled_49.jpg)
இதையடுத்து தான் கொடுத்த இந்த நன்கொடைக்குப் பிறகு ஸ்டன்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பலர் இன்னும் உதவிகள் செய்யுமாறு தன்னிடன் கேட்டுக்கொண்டதாகவும், மேலும் பொதுமக்களிடம் இருந்தும் கடிதங்கள், வீடியோக்கள் வந்துள்ளதால் தான் கொடுத்த 3 கோடி ரூபாய் போதாது என எண்ணிய ராகவா லாரன்ஸ் தன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை, முன்னதாக மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக அறிவித்திருந்த ராகவா லாரன்ஸ், யோசனைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்று பகுப்பாய்வு செய்ய 2 நாட்கள் தேவைப்படுவதால் தன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே நேற்று 'தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அரசு தடை விதித்திருப்பது தொடர்பாக ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
''கரோனா தடுப்பு நடவடிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்!
அதே சமயம், இந்த கரோனா ஊரடங்கினால் சரிவர உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு "இனி தன்னார்வலர்களோ, தனி நபர்களோ, உணவுப் பொருட்கள் எதையும் வழங்கக் கூடாது" என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவைத் தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனெனில்..... அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும் விரைவாக உணவுப் பொருட்களைத் தந்திட இயலாது என்பதே எதார்த்தம்.
அவ்வகையில், ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் எனும் நல்லெண்ணத்திலேயே, நான் கடந்த வாரம் கரோனா தடுப்பு நிவாரண நிதியை அளித்த கையோடு அடுத்த கட்டமாக வருகிற 14 ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு முதல் நானும் எனது நண்பர்களும், தமிழக அரசுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சில சேவை திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறோம்.
இந்நிலையில் தான் நமது தமிழக அரசின் இந்தத் தடை உத்தரவு என் போன்ற தன்னார்வலர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நமது அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம், தன்னார்வலர்கள் மக்களுக்குப் பொருட்களை வழங்குகிற நடைமுறையில் இன்னும் கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதனைக் காவல்துறையினரின் துணையோடு கடைப்பிடிக்குமாறு உத்தரவிடலாம்!
நம்மைப் பொறுத்தவரை, கரோனா நோய் தொற்று விஷயத்தில் தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து நடவடிக்கைகளும் அருமை! அற்புதம்! அதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்!
அதே நேரம்....
காய்கறி பழங்களை இலவசமாகக் கொடுக்கக் கூட மனமில்லாமல் குப்பையில் கொட்டுகிறவர்கள் இருக்கிற இதே நாட்டில்தான், அன்பை அளவில்லாமல் கொட்டுகிற தன்னார்வலர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அதனால்.....
தன்னார்வலர்கள் நேரடியாக உதவக் கூடாது என்கிற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வர் அவர்களை மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)