ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள்கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து ‘தேர்த் திருவிழா’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் இம்மாத தொடக்கத்தில் பிப்ரவரி 9ல் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவருகிற 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மாலை 4 மணி முதல் விழா தொடங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.