"அவர் சடலத்தை பார்க்க எனக்கு ஷக்தி இல்லை" - லட்சுமி ராமகிருஷ்ணன் உருக்கம்

lakshmi ramakrishnan about marimuthu

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நக்கீரன் சார்பாக நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் தொலைபேசி வாயிலாக மாரிமுத்துவின் இரங்கல் குறித்து கேட்டறிந்தோம். அவர் கூறுகையில், "முதலில் அவருக்கு ஆழ்ந்த இரங்கல். ஆறுதல் என்பதை விட பிரார்த்தனைகள் என்று தான் சொல்வேன். யுத்தம் செய் படத்தில் தான் அவர் எனக்கு பரீச்சயம். அவர் நடிப்பை பார்த்து வியந்து போய் ஆரோகணம் படத்தில் அவரை தேர்ந்தெடுத்தேன்.

அதன் பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. பெரிய ஒரு நடிகராக பயணித்தார். ஒவ்வொரு தடவையும் ஒரு தடவையாச்சும் என்னையும், மிஷ்கினையும் கூப்பிட்டு நன்றி சொல்லுவார். எத்தனையோ நடிகர்களை பார்க்கிறோம். ஆனால் ஒரு சிலர் தான் தான் ஆரம்பிச்ச இடத்தை மனசில் வச்சிக்கிறது. அது ஒரு பெரிய விஷயம். அதே போல் அவர் ஒரு சிறந்த கலைஞர். மேலும் நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டர். அவரிடம் ஏன் படம் இயக்குவதில்லை என கேட்டேன். ஒரு படம் எடுத்து ரிலீஸ் செய்வது ஒரு குழந்தையை டெலிவர் பண்ற மாதிரி. அந்த கஷ்டத்தை அவர் அனுபவிச்சார். எனக்கு இன்னொரு பாதை வந்திருக்கு. அந்த பாதையில் நான் பயணிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்றார்.

அதை ரசிச்சி ரசிச்சு பண்ணுவார். ஒவ்வொரு தடவையும் ஒரு வண்டி வாங்கினாலும், வீடு கட்டினாலும் அதை ரசிச்சு என்னிடம் சொல்லுவார். வாழ்க்கையை ரசிச்சி ரசிச்சு வாழ்ந்த ஒரு மனிதர். இன்னும் 40, 50 வருஷம் பயணிக்க வேண்டிய ஒரு மனிதர். திடீர்னு ஒரு விஷயம் காணாமல் போனதாக ஒரு ஷாக்கில் தான் எல்லாரும் இருக்கிறோம். அவரை பார்க்க நான் போகமாட்டேன். அதற்கான தைரியம் என்னிடம் இல்லை. தனியாக இருந்து பிரார்த்தனை பண்ணுவேன். 5 வருஷத்தில் என்னுடைய அக்காவையும், அம்மாவையும், அண்ணனையும் இழந்தேன். அதன் பிறகு எனக்கு சடலத்தை பார்க்க ஷக்தி இல்லை" என்றார்.

actor marimuthu lakshmi ramakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe