வாழ்க்கை வரலாற்று படங்களின் ட்ரெண்ட் தற்போது பிரபலாமாகி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான என்.டி.ஆர் வாழக்கை வரலாற்று படமான 'என்.டி.ஆர்.கதாநாயகடு' மற்றும் 'என்.டி.ஆர்.மகாநாயகடு' படங்கள் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி எதிர்பார்த்த வசூல் இல்லாமல் தோல்வியடைந்தது.

இந்த படத்தில் என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி சம்பந்தமான காட்சிகள் இல்லை. இந்த விடுபட்ட கதையை தொகுத்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற பெயரில் புதிய படத்தை ராம்கோபால் வர்மா இயக்கினார். இதில் என்.டி.ராமராவுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்து ஆட்சியை கைப்பற்றியதுபோல் காட்சிகள் உள்ளதால், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுபோல் உள்ளது என்றும், எனவே தேர்தல் காலத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தனர். இதையடுத்து படத்தை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கூறி படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.