வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை, பணி செய்ய விடாமல் தடுத்து, போதையில் தகராறு செய்த பெண் உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5-ஆம் தேதி இரவு திருவான்மியூர் போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான குழு, தெற்கு அவென்யூ சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தது. அந்தச் சாலையில் வந்த கார் ஒன்றை தடுத்துநிறுத்திய போலீசார், கார் ஓட்டி வந்த இளைஞரிடம் மது பரிசோதனை செய்துள்ளனர். அவர் மது அருந்தியிருப்பது தெரியவர, அவரைக் காரில் இருந்து இறக்கி, போலீசார் விசாரித்துள்ளனர். காரில் அவருடன் இருந்த இளம்பெண், கீழே இறங்கி வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்தப்பெண்ணும் குடிபோதையில் இருப்பது தெரியவர, அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முயற்சித்துள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அந்தப்பெண் போதையில் நடந்து கொண்ட விதம் போலீசாரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் பதிவாகின.
இதனையடுத்து, அந்தப் பெண் அடையாறு பகுதியைச் சேர்ந்த காமினி என்பதும் இவர் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மறுநாள் காலை தனது பெற்றோருடன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த காமினி மீது, போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில், காமினி மீது ஆபாசமாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காமினி சிறையில் அடைக்கப்பட்டார்.
காமினி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி இணையத்தில் வைராலான நிலையில், போலீசாரின் இந்தக் கைது நடவடிக்கையை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.