திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான பிரம்மாண்ட ஸ்டூடியோ ஒன்று இருக்கிறது. இந்த ஸ்டூடியோவில் நேற்று இருந்த ஏ.ஆர்.ரஹ்மானை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்று சந்தித்துள்ளார். 

ஸ்டூடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானும் எல்.முருகனும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது. குறிப்பாக மீனா, சமீபத்தில் பா.ஜ.க. தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசியிருந்த சூழலில் இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானை எல்.முருகன் சந்தித்தது பல கேள்விகளை எழுப்பியிருந்தது. 

இந்த நிலையில் எல்.முருகன் ஏ.ஆர்.ரஹ்மானுடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பிரம்மாண்ட ஸ்டூடியோ ஒன்று வைத்திருக்கிறார். அதில் மிகப்பெரிய டெக்னாலஜியெல்லாம் இருக்கிறது. அதனால் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துரையின் அமைச்சர் என்ற முறையில் ஸ்டூடியோவை பார்க்க சென்றேன். இவரைத் தவிர நிறைய சினிமா பிரபலங்களை அத்துறையின் அமைச்சர் என்ற முறையில் சந்தித்து வருகிறேன். அதில் பல பேர் எங்க கட்சியில் இணைஞ்சிருக்காங்க. அந்த வகையில் ஸ்டூடியோவை பார்ப்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தேன். அவரிடம் அரசியல் பேசவில்லை” என்றார்.