Kutty Padmini Interview

மறைந்த இயக்குநர், நடிகர் மனோபாலா குறித்த தன்னுடைய நினைவுகளை நடிகை குட்டி பத்மினிநம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

மனோபாலா அவர்களைப் பல வருடங்களாக எனக்குத் தெரியும். அவருடைய படங்களில் நான் நடித்திருக்கிறேன். மற்றவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர். அவருக்கு நண்பர்கள் தான் அதிகம். அவர் இல்லாத சினிமா சங்கமே இல்லை என்று சொல்லலாம். ஒரு வெற்றிகரமான இயக்குநராக இருந்து, அதன் பிறகு இயக்கும் வாய்ப்புகளை இழந்தாலும் நடிப்பின் மூலமாக அதை ஈடுகட்டி 500 படங்களுக்கு மேல் நடித்து வெற்றிகரமாக வலம் வந்தவர் மனோபாலா. இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்யாண மாலை நிகழ்ச்சிக்காக அவரோடு நான் கோவை பயணித்தேன். ஜாலியான அனுபவமாக இருந்தது.

Advertisment

கலை மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர். என்னுடைய சீரியலை அவர் டைரக்ட் செய்து கொடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் ஷூட்டிங் தொடங்கி முடித்து விடுவார். அனைத்து நடிகர்களுக்கும் அவர் நண்பர். தோட்டத்தை சுற்றி வாழ்வது எங்கள் இருவருக்கும் பிடித்த விஷயம். திருச்சியில் இருக்கும் வெக்காளியம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்வார். இருவரும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். அவை அனைத்தும் ஆரோக்கியமான சண்டைகள் தான்.

அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். என்னுடைய நெருங்கிய நண்பரான அவருடைய இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. ஒரு பெரிய சரித்திரப் படம் அல்லது டிவி சீரியல் பண்ண வேண்டும் என்பது அவருடைய ஆசை. சரித்திரக் கதைகள் கொண்ட புத்தகங்களை நானும் அவரும் விடாமல் படித்து விடுவோம். கலைஞரின் எழுத்தில் நாங்கள் ரோமாபுரி பாண்டியன் சீரியல் எடுத்தபோது அதில் தனக்கு ஒரு பாத்திரம் வழங்கியிருக்க வேண்டும் என்று சண்டையிட்டார்.

அவரால் தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்று நினைப்பார். அவருக்கு இந்த அளவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது யாருக்கும் தெரியாது. விவேக் சாரை கொரோனா தடுப்பூசி செலுத்த அழைத்துச் சென்றது மனோபாலா தான். நானே என்னுடைய நண்பனை அழைத்துச் சென்று, அவனுடைய சாவுக்குக் காரணமாகிவிட்டேனே என்று பலமுறை அழுதிருக்கிறார். விவேக் சாரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். சினிமாவின் பல கலைகளில் ஒரே நேரத்தில் இயங்கியவர். அவருடைய மறைவு சினிமா உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்.