
கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர்.இதையடுத்து அவர் தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.
ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்பூகண்டனம் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடுமைகளைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் உதவாது. உடனடியாக விசாரணை நடத்தி, குற்றம் செய்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பயத்தோடு பள்ளிக்குச் செல்ல முடியாது. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது கடுமையான குற்றம். இதில் அரசியலையோ, சாதியையோ கொண்டுவரக் கூடாது. குற்றவாளியைக் கடுமையாக தண்டிக்க வேண்டும். பயந்துள்ள குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)