சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 180 நாடுகளுக்கும் மேல் பரவி, உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக கடந்துவிட்டது. இதில் நூறு பேருக்கும் மேல் குணமடைந்துள்ளனர் மற்றும் 35 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மத வழிபாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கரோனா தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் தாங்களே முன்வந்து சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மாநில அரசுகள் கேட்டுகொண்டுள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள்தான் கரோனாவை பரப்புகின்றனர் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதனை கண்டிக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டரில், “இந்த சூழலில் மிகவும் பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால் சில முட்டாள்கள் கோவிட்-19 வைரஸை ஒரு சமூகப் பிரச்சினையாக மாற்றுகிறார்கள். இந்த வைரஸுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக் கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக் கொண்டு வீட்டில் இருக்கவும். எல்லா மதக் கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கரோனா வைரஸுக்கு மதம் கிடையாது. அது ஜமாத்தோ, உ.பி.யோ, கேரளாவோ எதுவாக இருக்கட்டும், எல்லாமே தவறுதான். இது போன்ற ஆபத்தான கட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காதது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது." என்று தெரிவித்துள்ளார்.