பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் ‘கும்கி 2’. திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்திருந்த இப்படத்தில் தம்பி ராமையா, அஷ்வின் ராஜா உள்ளிட்டோர் நகைச்சுவைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இமான் இசையில் அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. வசூல் ரீதியாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்து வெற்றி படமாக அமைந்தது.
இப்படத்திற்கு பிறகு கும்கி, கொம்பன் யானைகள் வெகுஜன மக்களால் பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இதற்கான அறிவிப்பு மோஷன் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் காடு பகுதிகள் காட்டப்பட முதலில் மான் விளையாடும் காட்சி இடம்பெறுகிறது. பின்பு கும்கி யானை ஒரு மலை உச்சியில் நின்று கொண்டு பிளிறுகிறது. உடனே ‘மீண்டும் பிறந்துவிட்டது’(Born Again) என போடப்பட்டுள்ளது. பின்பு கும்கி 2 என டைட்டில் வருகிறது.
இப்படத்தை பென் ஸ்டூடியோஸ் வழங்க, பென் மருதர் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரபு சாலமனே இப்படத்தையும் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இடையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மோஷன் போஸ்டர் மேஜிக்கலாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் கும்கி முதல் பாகம் தனக்கு பிடித்ததாகவும் இந்த படமும் முதல் பாகம் போல் வெற்றி பெறவும் படக்குழுவினரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.