'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘குமார சம்பவம்’. நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குமரன் தங்கராஜனுடன் பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். 

Advertisment

நிகழ்ச்சியில், நாயகன் குமரன் தங்கராஜன் பேசுகையில், “இந்தப் படத்தில் 'சினிமா என் லட்சியம்' என்றொரு டயலாக் வரும். உண்மையில் எனக்கு அது மிகப் பெரிய லட்சியம். கிட்டத்தட்ட 17 ஆண்டு கால இலட்சியம். சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவை நனவாக்கியது வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கணேஷ் சார். என்னுடைய குடும்பத்தினருக்கு திரை உலக பின்னணி கிடையாது. அப்பா டீ கடையில் வேலை பார்த்தவர். அவர் நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னார். அவருக்கும் அந்த ஆசை இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. அவருடைய கனவை நான் நனவாக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்.  

எங்கெங்கோ தேடி அலைந்து கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு தான் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது குமார சம்பவம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். இதற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம். இது எனக்கு எமோஷனலாகவும் இருக்கிறது. திருப்தியாகவும் இருக்கிறது. இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் யூட்யூப் தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். இன்று இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.