Kulasami trailer event

விமல் - தன்யா ஹோப் நடிப்பில் விஜய் சேதுபதி வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘குலசாமி’. இப்படத்தை ‘குட்டிபுலி’ சரவண சக்தி இயக்க எம்.ஐ.கே ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Advertisment

அப்போது இயக்குநர் சரவண சக்தி பேசுகையில், "இப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால்தான் இப்படம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி. இப்படம் மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது. நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி" என்றார்.

Advertisment

காவல்துறை அதிகாரி ஜாங்கிட் பேசுகையில், "தம்பி சரவணன் சக்தி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை.எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது என்னுடைய டிரைவர் தான்.என் டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கு தமிழ் தெரியாது.ஒரு நாள் அவரிடம் சீப்பு கேட்டேன் அதை நான் புரிய வைப்பதற்குள் ரொம்ப சிரமப்பட்டேன்.அன்றிலிருந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.படத்தில் நடிப்பது நான் சுலபமான விஷயம் என்று நினைத்தேன். ஆனால் அது மிகக் கடினம் என்பதை புரிந்து கொண்டேன்.என்னுடைய கதாபாத்திரம் சிறியது தான் ஆனால் சமூகத்திற்கு தேவையான கருத்தை படத்தில் கூறியுள்ளேன். டப்பிங் அதற்கும் மேல் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு பேசியுள்ளேன். இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ள கருத்து அனைவரிடமும் சேர வேண்டும்" என்றார்.

இயக்குநர் அமீர் பேசியதாவது, "இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர்.நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச் சிறந்த திறமையாளர். இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோஷன் மூலம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோஷன் செய்கிறார்கள். இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப் படத்தின் நாயகன், நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும்.அவர்கள் வராததுஎனக்கு வருத்தமே. அந்தக் குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப் படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்" என்றார்.