இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது நடிகராக அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ரீ ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு, “படையப்பா படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்யும் திட்டம் இருக்கிறது. அதனால் அப்படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். இது போக தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம், வில்லன், வரலாறு என நான் இயக்கிய பல படங்களை ரீ ரிலீஸ் செய்ய கேட்கிறார்கள். அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.
கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது தொடர்பான கேள்விக்கு, “எந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரவில்லை. எல்லா படத்திற்கும் வருகிறது. அப்படி இல்லாமல் வருவது ரொம்ப குறைவு. அந்த காலத்தில் நாட்டாமை படத்தை பிடிக்காதவர்களும் இருந்துள்ளார்கள். அவர்கள் பொதுவெளியில் பேசவில்லை. அதனல் நமக்கு தெரியவில்லை. இப்போது எல்லாரும் பொதுவெளியில் பேசுவதால் நமக்கு தெரிகிறது. விமர்சனங்கள் ஓரளவு தான் பட வெற்றியை பாதிக்கும். ஆனால் மக்களின் வாய்மொழி விமர்சனங்கள் தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும்” என்றார்.
விஜய் நடத்திய இரண்டாவது தவெக மாநாடு குறித்தான கேள்விக்கு, “எனக்கு அரசியலில் அனுபவம் கிடையாது. ஆனால் விஜய் பேசியது தப்பாக எனக்கு படவில்லை. ஏனென்றால் நிஜமாகவே விஜய், யாரையாவது நேரில் பார்த்தால் அங்கிள் என்று தான்அழைப்பார். அதை இப்போது பப்ளிக்கில் சொல்லியிருக்கார், அவ்வளவுதான். ஆனால் அவர் பேசியதை வேறு மாதிரியாக ஒரு குரூப் பேசுகிறது.
நானே ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் பண்ணியிருக்கேன். அந்த சமயத்தில் ஸ்டாலின் சார் முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் இருந்தார். அவர் படம் பார்க்க வரும் போது அங்கிள் என்று தான் அவரை கூப்பிடுவேன். அதனால் அங்கிள் என்பது தப்பான வார்த்தை இல்லை. மாநாட்டில் விஜய்யின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்ததால் அவர்களை குஷிபடுத்துவதற்கு அங்கிள் என்ற வார்த்தையை அவர் கொஞ்சம் கமர்ஷியலாக பயன்படுத்தியிருக்கார். மற்றபடி குறை சொல்ல வேண்டும் என அவர் சொன்னதாக எனக்கு தெரியவில்லை” என்றார்.