Skip to main content

 "பக்கத்து வீட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் பேசுகிறது" -  கே.எஸ்.ரவிகுமார்

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

bgrhb

 

பிரபல ஓடிடி தளமான ஜீ5, ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட படங்களை நேரடியாக வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து ஜீ5 தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘மதில்’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் வரும் ஏப்ரல் 14 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது. சோசியல் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தம புத்திரன்’ உள்ளிட்ட தனுஷ் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மேலும் மைம் கோபி, 'பிக்பாஸ்' புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் பேசியபோது...

 

hdthdhdsh

 

“இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நான் குடும்ப படங்கள் அல்லது நகைச்சுவை படங்கள்தான் இயக்கியிருக்கிறேன். இப்போதுதான் முதல்முறையாக சமூகப் படம் இயக்கியுள்ளேன். 'மதில்' திரைப்படம் தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கியப் பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. பல சூழ்நிலைகளில் நமக்கு மேல் இருப்பவர்களின் அதிகாரத்தைக் கண்டு, அஞ்சி நாம் அமைதியாக இருந்துவிடுகிறோம். இவற்றுக்கு எதிரான நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அவசியம் ‘மதில்’ படத்தில் விளக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

இப்படம் குறித்து இயக்குநர், நடிகர் கே.எஸ்.ரவிகுமார் கூறும்போது... "பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து வீட்டில் நடக்கும் தினசரி சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பு, அரசியல்வாதிகளுக்கு வகுப்பு, பொது மக்களுக்கு பொறுப்பு, களவாணித்தனத்துக்கு மறுப்பு, காவல்துறைக்கு சிறப்பு, 'தனக்கென்ன' என்பவர்களுக்கு படிப்பு, திறமையானவர்களின் நடிப்பு, மொத்தத்தில் ‘மதில்’ ஒரு தில்லான படைப்பு". மனசாட்சி சொல்படி தைரியமாக எதிரிகளைக் களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைக்குரல்தான் இந்த ‘மதில்’ படம்“ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்