krishnasamy about mari selvaraj vaazhai movie

மாரி செல்வராஜ் முதல் முறையாக தயாரித்து இயக்கியுள்ள படம் வாழை. இப்படத்தில் அவரது பள்ளிப்பருவத்தில் அவர் வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலிளில் ஈடுபட்டதை மைய்யமாகக் கொண்டு உருவாக்கியிருந்தார். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிடோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Advertisment

இப்படத்திற்கு பாரதிராஜா, மணிரத்னம், வெற்றிமாறன் எனப் பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அரசியல் தலைவர்களான திருமாவளவன் எம்.பி., சீமான், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மாரி செல்வராஜை பாராட்டியிருந்தனர்.இந்த நிலையில் இப்படம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனது கருத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “இம்மண்ணின் பூர்வீக குடிமக்களைப் பெருமைப்படுத்த முடியாமல் போயிருக்கலாம்.! ஆனால் சிறுமைப்படுத்தி இருக்கக் கூடாது. போராட்ட உணர்வுகளை கூர்மைப்படுத்தாமல் போயிருக்கலாம்!! ஆனால், அழவைத்து அனுதாபம் தேடி உணர்வுகளை மழுங்கடிக்க முயற்சித்திருக்கக் கூடாது.! ‘வாழை’யை சொல்லி கூலிகளாக - கோழைகளாக்க வேண்டாம்.

Advertisment

எந்த வெற்றி படைப்பாளிகளும் தங்கள் வலிகளைச் சொல்வதால் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. சக மனிதர்களின் வலிகளைச் சொல்வதாலும், அதற்கான காரணிகளைக் களைவதற்காகக் களத்தில் நிற்பதாலும் தான் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஒரு படைப்பாளி தனது வலிகளைப் பதிவு செய்வது என்பது வேறு; அதை அவன் சார்ந்த சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்வது என்பது வேறு.! தனது வலிகளை சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்கின்ற பொழுது அல்லது வலிந்து தனது வலியை இந்த சமூகத்தில் விதைக்கின்ற போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சினிமா திரைப்படங்கள் சமூகத்தில் எழுச்சியை உண்டாக்கும்; அதே போல எழுச்சியை நீரூற்றியும் அணைக்கும்.!

இம்மண்ணின் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை படம் போட்டுக் காட்டி யாருடைய அனுதாபங்களையும், அதன் மூலம் வசதிகளையும் தேட முயலக் கூடாது. வாழையைப் பற்றிப் பேசும் பொழுது மாபெரும் ஒரு சமுதாயத்தை கோழையாக்குகின்ற வகையில் எவரின் எழுத்துக்களோ, பேச்சுக்களோ, நடிப்புக்களோ, சினிமாக்களோ அறவே கூடாது. தென் தமிழகத்தின் முக்கிய ஒரு கிராமத்திலிருந்து, தென் தமிழக தேவேந்திர குல வேளாளர்களின் முக்கியமான போராட்ட காலகட்டங்களில் வாழ்ந்து, இன்று திரைத்துறையில் பேசப்படக்கூடிய, போற்றப்படக்கூடிய ஒரு இயக்குநராக ஒருவர் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்; அதற்காகப் பாராட்டுகிறோம்.

Advertisment

அதே சமயத்தில் தனது இழந்த அடையாளத்தை - அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம்; ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் கூலிக்காரர்களாகவே சித்தரித்துச் சிறுமைப்படுத்துகின்ற போக்கும்,அவர்களின் போராட்ட உணர்வுகளையும் குணங்களையும் மழுங்கடித்து யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்துக் கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.! எனினும், பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை. தன்னைக் காட்டிலும் தனது குடும்பம் பெரிது; தனது குடும்பத்தைக் காட்டிலும் இந்த குலமும் இந்த மண்ணும் மக்களும் பெரிது என்ற அடிப்படையில் வாழ்ந்து, என்றோ வீழ்ந்து, இன்று மீண்டும் வீறுகொண்டு எழுந்திருக்கக் கூடிய மாபெரும் சமுதாயத்தை ‘வாழை’யை சொல்லி கூலிகளாக - கோழைகளாக்க வேண்டாம்” எனக் பதிவிட்டுள்ளார்.