கேபிஒய் பாலா ஹூரோவாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’. ஷெரிஃப் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை ஜேயிகிரண் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்க விவேக் - மெர்வின் இருவரும் இசையமைத்துள்ளனர். இப்படம் அடுத்தம் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பாலா, “இந்த படம் எனக்கு எப்படி என கேட்டால், வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ட்டு கப் கொடுத்த மாதிரி தான். நான் படம் பண்ணுவேன் என கனவிலும் நினைச்சு பார்த்ததில்லை என்று சொல்வதை கனவில் கூட இப்படி நடக்காது என எனக்கு தெரியும். அதையும் தாண்டினது தான் இந்தப்படம். இங்கு நான் இப்படி நிப்பதற்கு காரணம் அப்பா அம்மாவை தாண்டி அமுதவாணன் தான். என்னை யாரென்றே அவருக்கு தெரியாது. வெறும் அன்பை மட்டும் வைத்தே என்னை பார்த்துக் கொண்டார். விஜய் டிவிக்கு பிறகு 19 படங்களில் நடித்திருப்பேன். ஆனால் அதில் 12 படங்களில் நான் நடித்த காட்சி இடம் பெற்றிருக்காது. அதை நினைத்து நிறைய ஃபீல் பண்ணியிருக்கேன்.
ஒரு நாள் இந்த பட இயக்குநர் ஷெரிப்புடன் ஒரு குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் உதவுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஹீரோவாக படம் நடிக்கிறியா என அவர் கேட்டார். அவர் ஏற்கனவே படம் பண்ணியிருந்ததால் என்னை வைத்து படம் பண்ணுவியா எனக் கேட்டேன். சொல்றேன்னு சொல்லி வைத்தார். கட் பண்ணா ஒரு ஷோவில் லாரன்ஸ் அண்ணன் உனக்கு என்ன ஆசை என கேட்டார். அப்போது ஷெரிப் கேட்டது தான் நியாபகம் வந்தது. உடனே ஹீரோவாக நடிக்க வேண்டும் என சொன்னேன். அது நடக்காது என தெரியும், நிறைய நிராகரிப்பை நான் பார்த்துவிட்டேன். அது இல்லாமல் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம். இருந்தாலும் ஒரு ஆசையில் லாரன்ஸ் அண்னாவிடம் சொல்லிவிட்டேன். அவரும் நானெல்லாம் ஆகும் போது நீ ஆகக்கூடாதா என சொன்னார். இந்த வர்த்தையை எவ்வளவு பேர் சொல்வார்கள் எனத் தெரியவில்லை. அதையும் தாண்டி நான் ஹீரோவாக நடிக்க அவர் சொன்ன இன்னொரு காரணம், நான் நல்லாயிருந்தால் இன்னும் நாற்பது குடும்பம் நல்லாயிருக்கும் என்று அவர் சொன்னது தான்.
அதன் பிறகு ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் பண்ண ரெடியாக இருப்பதாக ஷெரிப் சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம். இதுவரை நிராகரிப்பை மட்டுமே சந்தித்து வந்த எனக்கு தானாகவே முன் வந்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஜேயிகிரண் தான். என் படத்தில் நடிக்க ஒப்புகொண்ட பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோருக்கு நன்றிகள். எனக்கு ஹீரோயினாக நடிக்க வந்த நமிதா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி. பொதுவாக என் படத்தில் ஹீரோயின் ரோலுக்கு, கதை கேட்டு நல்லாயிருக்கு என பாராட்டும் நடிகைகள் ஹீரோ நான் எனத் தெரிந்ததும் ரிஜெக்ட் செய்துவிடுவார்கள். இது போன்று ஒரு 50 நடிகைகள் ரிஜெக்ட் செய்திருப்பார்கள். ஆனால் எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் நமிதா நடித்தார்” என்றார்.