தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அபினய். பின்பு மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ச்சியாகத் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கடைசியாக சந்தானம் நாயகனாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2014ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு இவர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. இதனிடையே நிறைய விளம்பர படங்களிலும் நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம், லிவர் சிரோசிஸ்(Liver Cirrhosis) எனப்படும் கல்லீரல் நோயால் இவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்புகைப்படங்களில் அவருடைய வயிற்றுப் பகுதி அளவுக்கு அதிகமாக வீங்கி இருப்பது பலரையும் கலங்கடிக்கச் செய்தது. இதையடுத்து நிதியுதவி கேட்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார். இதுவரை ரூ.15 லட்சத்துக்கு மேல் சிகிச்சைக்காகச் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர் மேல் சிகிச்சைக்காக ரூ 28.5 லட்சம் தேவைப்படுவதால், அதற்கு உதவுமாறு உருக்கமாகக் கேட்டிருந்தார். 

Advertisment

இந்த சூழலில் அபினய்க்கு சின்னதிரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வரும் கேபிஒய் பாலா, தற்போது உதவி செய்துள்ளார். அபினய் வீட்டுக்கு சென்ற அவர், அவருடன் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது பாலாவுடன் பேசிய அபினய் மனம் விட்டு பேசினார். பின்பு அபினய்க்கு ரூ.1 லட்சம் கொடுத்து விரைவில் பூரண குணமடைய வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தினார். பிறகு பாலாவை அபினய் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.