சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இதில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது தொடங்கி பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வாங்கி கொடுத்தது வரை தனி நபருக்கு ஊர் மக்களுக்கும் செய்த உதவிகள் அடங்கும். 

இந்த வரிசையில் தற்போது ஒடு சிறுமிக்கு வீடு கட்டி தந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த பாப்பவுக்கு முதுகு தண்டுல பிரச்சனைன்னு சொன்னதாக பார்க்க வந்திருந்தோம். ஆனால் அவருக்கு அந்த பிரச்சனையோடு வீடும் பிரச்சனையாக இருந்துச்சு. அதனால வீடு கட்டிதாங்கன்னு கேட்டிருந்தாங்க. மூணு மாசத்துல கட்டி தரோம்னு சொன்னோம்.  

இப்போ இரண்டு மாசத்துல புது வீடு கட்டிக் கொடுத்துட்டோம். பாப்பாவை சொந்த வீட்டுல பார்ப்பது சந்தோஷமா இருக்கு. என்னுடைய பிறந்தநாளில் என் சொந்த காசுல இந்த வீட்டை கட்டி கொடுத்ததை கடமையா பார்க்கல. உரிமையா பார்க்குறேன்” என்றார்.  

இதனிடையே பாலா ஹூரோவாக அறிமுகமாகும் படத்தில் டைட்டில் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘காந்தி கண்ணாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்குகிறார். ஜெயகிரண் என்பவர் தயாரிக்கிறார். பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விவேக் - மெர்வின் இருவரும் இசையமைக்கின்றனர்.