கேபிஒய் பாலா ஹூரோவாக நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷெரிஃப் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை ஜேயிகிரண் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்க விவேக் - மெர்வின் இருவரும் இசையமைத்துள்ளனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. நேற்று ரசிகர்களுடன் படக்குழுவினர் மற்றும் நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸ் பார்த்தார். பாலவும் லாரன்ஸும் சேர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த லாரன்ஸ், “பாலா சிரித்தால் மக்கள் சிரிக்கிறாங்க. பாலா அழுதால் மக்கள் அழுவுறாங்க. பாலா அடித்தால் மக்கள் கைதட்டுறாங்க. அதனால் மக்கள் பாலாவை ஹீரோவா ஆக்கிட்டாங்க. எதிர்காலத்தில் பாலா பெரிய ஹீரோவா வருவாரு” என்றார்.
பின்பு பேசிய பாலா, “பட ரிலீஸூக்கு முன்னாடி கடைசி மூணு நாளில் ரொம்ப கஷ்டப்பட்டோம். தியேட்டரில் போஸ்டர், பேனர்லாம் வைக்கவிடாம பன்றாங்க. படம் ஓடியும் போஸ்டர் இல்லாததால் படம் ஓடவில்லை என நினைத்துக் கொண்டு மக்கள் திரும்பி போறாங்க” என சற்று கலக்கமாக சொன்னார். இதனிடையே மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், தன் மீது எழுந்த விமர்சனம் குறித்து பேசியிருந்தார். அதாவது, அவர் செய்யும் உதவி யாரோ ஒருவரின் பணத்தால் செய்வதாக விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கு பதிலளித்த அவர், “நான் கஷ்டப்பட்டு இரவு பகலுமாக உழைத்து, சம்பாதிக்கிறேன். உதவி என்பதை தாண்டி என் கடமையாக நினைத்து அதை செய்கிறேன். இதுவரை நான் செய்த கடமைமையை என் சொந்த பணத்தில் தான் செய்திருக்கிறேன். ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்கியதில்லை. இனிமேலும் வாங்க மாட்டேன். என்னை விமர்சிப்பவர்களுக்கு மக்களே பதில் சொல்லிவிடுகிறார்கள்” என்றார்.