பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் நாளை (14.12.2023) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால் இந்த சீரிஸிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். நேற்று இந்த சீரிஸின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. சீரிஸை பார்த்த பலர் பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினி குறித்து வீரப்பன் பேசும் வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் புதுப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் வீரப்பனின் அரசியல் பார்வை குறித்து பேசும் வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த ப்ரோமோவில், “கேரளா மக்கள் எங்கிட்ட சொல்வாங்க, தமிழ் மக்கள் சர்வ சாதாரணமா நடிகர்களுக்கெல்லாம் ஓட்டு போடுறாங்களே என்ன அநியாயமா இருக்குது...இங்கே போல் கேரளாவில் பெரிய பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனா நின்னா 10 ஓட்டு கூட வாங்க முடியாது. சினிமா மேல் ஆசை படுவாங்க, பார்ப்பாங்க. படம் பார்க்குறதோட முடிச்சிட்டு வந்திடுவாங்க. ஓட்டு போடமாட்டாங்க... சினிமாக்காரங்களுக்கு அரசியல் பத்தி என்ன தெரியும். அவனுக்கு போய் ஓட்டு போடுறாங்களே. இந்த தமிழ் மக்களுக்கு எவ்ளோ மூளைஇருக்கும். அப்படின்னு சொல்லி விழுந்து விழுந்து சிரிப்பாங்க.” மேலும் அவர்,“எதை எடுத்தாலும் தமிழன் ஏமாந்துதான் போவான். கேரளாகாரனுக்கு இருக்கிற புத்தி தமிழனுக்கு இல்லை” என்றுவீரப்பன் பேசுகிறார்.