விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்த முறை சரத்குமாரோடு கூட்டணி போட்டு கொம்பு சீவி படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். இதுவரை எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் இருக்கும் இவர் இந்த படம், மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதிக்க எடுத்த முயற்சியில் வெற்றி கண்டாரா, இல்லையா?
வைகை அணை கட்டிய சமயத்தில் அந்த அணைக்காக தங்களது கிராமங்களை விட்டுக் கொடுத்துவிட்டு ஊருக்காக ஒதுங்கி இருக்கும் அந்த ஊர் மக்கள் தனது வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். அவர்களை காப்பாற்றுவதற்காக சரத்குமாரும், சண்முக பாண்டியனும் சேர்ந்து கொண்டு கஞ்சா வியாபாரம் செய்து அதில் வரும் பணத்தில் அந்த ஊருக்கு தங்களால் முடிந்த நல்லவற்றை செய்து வருகின்றனர். இது போலீசுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறது. இவர்கள் இருவரையும் போலீஸ் கையும் களவுமாக பிடிக்க பல்வேறு யுக்திகளை கையாள்கிறது. இவர்கள் ஊருக்காக செய்யும் இந்த விஷயத்தை போலீஸ் தடுத்து நிறுத்துகிறதா, இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை.
இதுவரை காமெடி படங்களை கொடுத்து தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் பொன்ராம் இந்த முறை காமெடி உடன் கலந்து சமூக அக்கறை கொண்ட படமாக இந்த கொம்பு சீவி படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் அவருக்கே உரித்தான பாணியில் படம் கலகலப்பாக நகர்ந்து போக போக சீரியஸ் கதைக்குள் நுழைந்து எங்கெங்கெல்லாம் சீரியஸ் வேண்டுமோ அங்கெல்லாம் காமெடி செய்து எங்கெல்லாம் காமெடி வேண்டுமோ அங்கெல்லாம் சீரியஸ் செய்து ஒரு கலகலப்பு கலந்த சீரியஸ் படமாக இப்படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பலன் கிட்டயேதா என்றால் சந்தேகமே. எந்தெந்த இடத்தில் எந்தெந்த எமோஷன்கள் தேவையோ அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் காமெடிகளை சேர்த்து வைத்திருப்பது பார்ப்பவர்களுக்கு பல இடங்களில் அயற்சி ஏற்படுகிறது.
அதேபோல் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அதே க்ளிஷே காட்சிகள் திரைக்கதையில் பல இடங்களில் எட்டிப் பார்ப்பதும் சற்று வேகத்தடையாக அமைந்திருக்கிறது. மற்றபடி சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி பல இடங்களில் சீரியஸ் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அது படத்திற்கு பக்க பலமாக அமைந்து பிளஸாக மாறியிருக்கிறது. இருந்தும் தான் சொல்ல வந்த விஷயத்தை நேரடி சீரியஸ் பாடமாக கூறியிருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். அல்லது முழுக்க முழுக்க காமெடி படமாக எடுத்திருக்கலாம். இது இரண்டுக்கும் நடுவில் இருப்பது சற்று நெளிய வைத்திருக்கிறது.
சண்முக பாண்டியன் இந்த முறை காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார் அது பல இடங்களில் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. நடிப்பில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு இந்த படம் மூலம் சென்று இருக்கிறார் சண்முக பாண்டியன். அவருக்கு இந்த கலகலப்பான வேடம் நன்றாக சூட் ஆகியிருக்கிறது. அதேபோல் சரத்குமார் கலகலப்பான நடிப்பையும் அதே சமயம் சீரியஸ் நடிப்பையும் கலந்து கட்டி சிறப்பான முறையில் நடித்து வழக்கம் போல் கவர்ந்திருக்கிறார். இவரது அனுபவம் நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. புதுமுக நடிகை நாயகி தாரணிகா வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். போலீசாக வரும் இவர் மிடுக்கான தோற்றத்தில் கவர்கிறார். மற்றபடி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், முனீஸ் காந்த்,கல்கி ஜார்ஜ் உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்து படத்திற்கு வலு சேர்க்க முயற்சி செய்திருக்கின்றனர்.
பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களில் இன்னமும் கூட பங்களிப்பு சிறப்பாக செய்திருக்கலாம். இதை முழுக்க முழுக்க காமெடி படமாக கொடுத்திருக்க வேண்டும் அல்லது முழுக்க முழுக்க சீரியஸ் படமாக கொடுத்து இருக்க வேண்டும். இந்த படம் இரண்டுக்கும் நடுவில் இருப்பது படத்திற்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது. திரைக்கதையில் இன்னமும் கூட கவனமாக செயல்பட்டிருந்தால் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும்.
கொம்பு சீவி - கூர்மை குறைவு!
Follow Us