நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். திட்டமிட்டபடி வெளியாகவிருந்த இப்படம், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர், ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. கரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது.
இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்து, சில ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும், இறுதி முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. தற்போது தமிழ்நாட்டில் இயல்புநிலை திரும்பிவருவதால், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் படத்தை நேரடியாக திரையரங்கிலேயே வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இருப்பினும், திரையரங்க வெளியீடா அல்லது ஓடிடி வெளியீடா என ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவிவருகின்றன.
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ‘டாக்டர்’ பட அப்டேட் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில், "சிரிப்பதற்கு தயாராகுங்கள். இன்னும் சில நாட்களில் ‘டாக்டர்’ படத்தின் அப்டேட் வெளியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது. இது, ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.