மக்களவை எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி, கடந்த 2022ஆம் ஆண்டு பாரத் ஜடோ யாத்திரையின்போது, எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் 2020ஆம் ஆண்டில் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை, சீன ராணுவம் கொலை செய்ததாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதையடுத்து ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

Advertisment

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ராகுல் காந்தியை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர். ராகுல் காந்தி உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டார் என நீதிபதி தத்தா விமர்சித்திருந்தார்.  

இந்த நிலையில் நடிகர் கிஷோர் உச்ச நீதிமன்ற நீதிபதியை சாடியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “நீதியின் பக்கம் பேசவேண்டிய உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆளும் கட்சியின் மோசமான அரசியலின் பக்கம் பேசுகிறார். அவர் ஆளும் கட்சியாக மாறிவிட்டாரா? சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆயிரக்கணக்கான சாட்சிகள் இருந்தபோதிலும், அரசாங்கத்தை கேள்வி கேட்காத அவர், அரசாங்கம் மூடிமறைத்த உண்மைகளைக் கண்டறியவும் முயற்சிக்கவில்லை. மாறாக அதை அம்பலப்படுத்திய நபரை குறிவைக்கிறார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட கேள்வி, நீங்கள் ஒரு உண்மையான தேசபக்தரா?

தேசபக்தி என்ற போர்வையில் தனது துரோகத்தை மறைக்கிறார். தேர்தல் ஆணையத்தின் துரோகத்தை அம்பலப்படுத்திய ஒரு இந்திய குடிமகன் மீது அவதூறு பரப்ப முயற்சிக்கிறார். இதன் மூலம் ஆளும் கட்சி செய்த மோசடி விஷயங்களில் தானும் ஒரு கூட்டாளி தான் என உச்ச நீதிமன்ற நீதிபதி நிரூபிக்கிறாரா?” என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

Advertisment